சேர் பொன்னம்பலம் இராமநாதன் வரலாறு

சேர்.பொன்.இராமநாதன்

அறிமுகம்

சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கைத்திருநாட்டில் வந்துதித்த தேசிய மகா புருஷர்களில் முன்னிலை வகிக்கும் ஒரு மகான் ஆவார். April 16, 1851 இல் யாழ்பாணத்தில் பிறந்தார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடை நிலைகல்வியை பயின்ற அவர், உயர் கல்வியை கல்கத்தா பல்கலைகழகத்தில் பெற்றார். கொழும்பு சட்டக்கல்லூரியில் கற்று சட்டத்தரணியானார். நீதியரசராக கடமை புரியக் கூடிய வாய்ப்புக்கள் கிடைத்தும், உயர் பதவிகளை பெற்று பொருளாதார வசதிகளுடன் வாழக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தும் அவற்றை எல்லாம் துச்சம் என புறந்தள்ளி விட்டு நாவலர் வாழ்ந்து காட்டிய பாதையில் சைவத்தையும் தமிழையும் பாதுகாத்து வளர்க்கச் சித்தம் கொண்டார்.

சூழ்நிலை

பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிலவிய அரசியல் சூழ்நிலை எமது மொழி, சமயம், கலை, கலாசாரம், என்பன வளர்ச்சியடை தடையாக இருந்தது. 1850 முதல் 1900ம் ஆண்டு வரை ஆங்கிலேயர் அதிக அதிகாரம் செலுத்தி சுதேசிகளை அடக்கி, ஒடுக்கி அவர்களின் சுதந்திரங்களை மடக்கிய சூழலில் தான் இவரும் வாழ்ந்தார்

அரசியல் முதல் ஆன்மிகம் வரை அவரின் ஆளுமையும் அகன்ற நோக்கும், ஆழ்ந்த நுண்ணிய அறிவும் அவருக்கேயுரிய தனிப்பண்புகளாக விளங்கியது. அன்னியரின் ஆதிக்கம் அந்நிய மதங்களின் பிரவேசம் ஈழ நாட்டில் கருமேகம் என சூழ்ந்திருந்த கால கட்டத்தில் சைவத்தையும் அதன் பண்பாட்டுக் கருவூலங்களையும் இருளை அகற்றும் கதிரவன் போல சைவக் கலாசார போராளியாகத் தோன்றி அளப்பரிய கைக்கரியங்கள் புரிந்த ஓர் அவதார புருஷராவார்.

சேர்.பொன்.இராமநாதன் இந்து சமயப்பணிகள்

இவர் பல்துறைப் பணிகள் ஆற்றுவதற்கு பரம்பரை பிரபுத்துவம், நாவலர், சி.வை.தாமோதரம் போன்றோரிடம் கொண்ட தொடர்பு, தஞ்சாவூர் அருட்பரானந்தரின் திருப்பார்வை, நாவலர் சட்ட சபையில் ஒரு பிரதிநிதித்துவம் சைவர்களில் ஒருவர் இருக்க வேண்டும் என்று கருதியமை, மக்கள் சேவையே மகேசன் சேவை என கருதியமை போன்ற காரணங்கள் காரணமாக அமைந்தன.

இவருடைய இந்துசமயப் பணிகள் பின்வருவனவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளன.

  • நாவலரின் பணிகளை முன்னெடுத்தல், நாவலரின் மரபைக் காத்தல்.
  • இந்துக்கல்வி முறைகளை அபிவிருத்தி செய்தல்
  • சைவம், அதன் விழுமியம், சைவ தத்துவ மெய்ப்பொருள் தொடர்பானவற்றை மேற்குலகினருக்கு பிரச்சாரம் செய்தல்.
  • அரசியல், பொருளாதாரம், கலை, சமூகம், ஆன்மிகம், கலாசாரம் ஆகிய துறைகளை மையமாகக்கொண்டு சமூகத்தொண்டு புரிந்தமை.

நாவலர் இலட்சியங்களை போற்றியவர், நாவலரால் நிறைவேற்றப்படாது விட்டுச்செல்லப்பட்ட சைவ வித்தியா விருத்தி நிறுவனம் மூலம் நிறைவேற்றி நாவலரின் கல்வி இலட்சியங்களை அவர் காட்டிய வழியில் நின்று முழு மனதுடன் செயற்படுத்தியவர். தனது இறுதிக்காலம் மட்டும் இந்நிறுவனத்தின் முகாமையாளராக, செயலாளராக, தொண்டராக இருந்து செயற்படுத்தியவர்.

வட்டுக்கோட்டை எஸ்.இராசரெத்தினம், காரைநகர் அருணாசல உபாத்தியார், சேர்.வைத்தியலிங்கம் துரைசாமி முதலிய பெரியார்களுடனும் தொடர்பு கொண்டும் நாவலரின் இலட்சியங்களை இந்நிறுவனத்தினூடாக செயற்படுத்தியவர்.

சைவ வித்தியா விருத்திச்சங்கத்தினூடாக இவர் செய்த கைங்கரியங்கள் பின்வருமாறு.

  • யாழ்பாணம், கிளிநொச்சி, வன்னி, முல்லைத்தீவு, உள்ளிட்ட, பல இடங்களில் அதிகமான சைவ வித்தியா சாலைகள் நிறுவியமை.
  • சைவப்பிள்ளைகள் மதமாற்றம் செய்யப்படுவதை தடுத்தமை.
  • சைவ மக்களிடையே இருந்து வரும் ஏற்றத்தாழ்வுகளை தடுத்தற் பொருட்டு சைவப்பாடசாளைகளில் சமபோசனம், சம ஆசனம் என்பவற்றை தாமே முன்னின்று நடத்தியமை.
  • தாழ்த்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த பிள்ளைகளை எவ்விதப் பாகுபாடின்றி சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தின் கீழ் இயங்கும் சகல பாடசாலைகளிலும் சேர்த்துகொள்ளச் செய்தமை.

பெண்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் பாடுபட்டார். 1913இல் யாழ்பாணம் மருதனாமடம் என்னும் இடத்தில் இராமநாதன் மகளிர் கல்லூரியை நிறுவினார். அத்தோடு இராமநாதன் பெண்கள் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையையும், 1927ல் ஆண்களுக்கும், பெண்களுக்குமான சைவ அநாதை விடுதிகளை திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலய வளாகத்தினுள் அமைத்துப் பராமரித்தும் வந்தார். அத்தோடு மாணவர்களுக்காக திருநெல்வேலியில் பரமேஸ்வரா கல்லூரியை 1921இல் நிறுவினார்.

சைவப் பாடசாலைகளில் சைவச்சூழலை ஏற்படுத்தி சைவப் பண்பாட்டை மாணவர்களிடத்தில் வளர்க்கவல்ல நல்லாசிரியர்களை உருவாக்கும் நோக்கத்துடன் திருநெல்வேலியில் சைவாசிரிய பயிற்சிக்கல்லூரி 1928இல் நிறுவப்பட்டது.

சைவாலயங்களையும் நிறுவிப் பராமரித்தார்.

கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் கோயில். தென்னிந்திய சிற்பிகளைக் கொண்டு அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கோயிலாக நிர்மாணித்தார்.

திருநெல்வேலி – பரமேஸ்வரன் ஆலயம்.

ஆக்கங்கள்

ஆத்திசூடி மந்திரவிளக்கம், திருக்குறள் பாயிர இராமநாதபாஷ்யம், செந்தமிழ் இலக்கணம், பகவத்கீதை விருத்தியுரை என இன்னும் பல நூல்களை எழுதியுள்ளார்.

பிரச்சாரம்

மேற்குலக நாடுகளில் குறிப்பாக இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் சைவம், சைவ சித்தாந்தம் முதலான விடயங்கள் பற்றி ஆங்கிலத்தில் சொற்பொழிவு செய்தார். இதனால் அவருக்கு மேலை நாட்டவரும் சீடர்களாக கிடைத்தனர். மதுரைத் தமிழ்ச் சங்கம், சென்னை சைவசித்தாந்த சமாஜம், திருவள்ளுவர் மகாசபை  முதலான மாநாடுகளுக்கு தலைமை தாங்கி சொற்பொழிவு நடாத்தினார்.

முடிவுரை

1930ஆம் வருடம் இறைவனடி சேர்ந்தார். சைவத்தையும் சைவத்தின் பண்பாட்டுக் கருவூலங்களையும் பிறமதக் கலாசாரம் என்னும் கருமேக இருள் சூழ்ந்திருந்த காலகட்டத்தில் அவ்விருளை அகற்றும் ஞான ஒளியாக ஈழத்திலே தோன்றிய அவதார புருஷரானார். சைவ வித்தியா விருத்திச் சங்கத்திற்கு முன்னோடியாக காணப்பட்டவர்.