வேத இலக்கியங்களில் பெண்

வேத இலக்கியங்களில் பெண்

வேத இலக்கியங்களில் பெண். இந்துசமய மூல நூல்களின் வரிசையில் வேதங்கள் தனித்துவமான இடத்தினைப் பெறுகின்றன. „வித்‟ எனும் சொல்லின் வினையடியிலிருந்து „வேதம்‟ என்ற சொல் தோற்றம் பெற்றது. (வித் – அறிவு). இவை இருக்கு , யசுர், சாமம், அதர்வணம் என நால்வகைப்படும். இவற்றுள் முதல் மூன்று வேதங்களும் „திரையிவித்யா‟ எனப்படும். ஏட்டில் எழுதப்படாமல் செவிவழியாகக் கேட்கப்பட்டது என்ற பொருளின் அடிப்படையில் இவை எழுதாமறை, ஸ்ருதி, எழுதாக்கிழவி, ஆம்நேயம் , அபௌருஷயம் என அழைக்கப்பட்டன. வேத உண்மைகள் யாவும் கண்டு கொள்ளப்பட்டவைகளே தவிர அவை உண்டாக்கப்பட்டவை அல்ல, அவை தனி மனிதத் தொடர்பற்றவையாகும்.

“ இந்துமதத்தின் மூலமானது மனித வரலாற்றுக்கு முந்தையது என்றும் அதன் உண்மைகள் ( (வுசரவாள) தெய்வ வாக்காக அருளப்பட்டு ( ஸ்ருதி) மிகப் பழமையான வேதங்கள் மூலமாகப் பழங்காலத்திலிருந்து இற்றைய காலம் வரை சொல்லப்பட்டு வருகின்றன.”1 என்பது அறிஞர்களது கருத்து. இந்நூலின் பெருமையினை „வேதச் சிறப்பு‟ எனும் பகுதியில் திருமூலர்,

“வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே”2 எனவும்,

சிவஞானசித்தியார் என்ற நூலில் அருணந்திச்சிவாச்சாரியார்,
“வேத நூல் சைவநூல் என்றிரண்டே நூல்கள்
வேற்றுரைக்;கும் நூல்கள் இவற்றின் விரிந்த நூல்கள்
ஆதிநூல் அனாதி அமலன் தருநூல் இரண்டும்
ஆரண நூல் பொது சைவ அருஞ்சிறப்பு நூலாம்” எனவும் கூறுவதனூடாக அறிந்து கொள்ளலாம்.

ஆறுமுகநாவலர், சைவசமயத்தவர்களுக்கு முதல் நூல்கள் , இருக்கு, யசுர், சாமம், அதர்வணம்”3 என்கிறார். இந்நூலின், காலம் குறித்து அறிஞர்களிடையே பல கருத்து முரண்பாடுகள் உள்ளன. „கி.மு 2000 – 500‟4 வரை என்றும் கி.மு 1500 – 500 வரை என்றும் வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவை கி.மு 2000ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது மக்ஸ்முல்லர் அவர்களது கருத்தாகும்.

வேத இலக்கியங்களில் பெண் பற்றி நோக்கின், இவ்விலக்கியங்களில் பெண் உயர் நிலையில் போற்றப்பட்டுள்ளாள். தாய் இல்லாத வீட்டில் சமயச் சடங்குகள் நிகழ்த்தப்படவில்லை. தாய் வீட்டாரின் சொத்தில் பெண்ணுக்கே உரிமையுண்டு. தாய் மரணிக்கும் பட்சத்தில் அவளுடைய மகளுக்கு அவ்வுரிமை அளிக்கப்பட்டது. ஆனபோதும் திருமணத்தை நிச்சயிக்கும் பொறுப்பு தந்தையைச் சார்ந்து காணப்பட்டது. அரசர்கள், செல்வந்தர்கள் பல பெண்களை மணந்தாலும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை உயர்வாக மதித்தனர். திருமணத்தின் போது பெண்வழிச் செல்வம் பெற்றதுடன் (னுழறசல) விவாகத்தை புனிதமான (தேவ கட்டளை) இணக்கமாகக் கருதி, பருவம் அடைந்த பின்னரே பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். வேதங்களின் ஞான காண்டப் பகுதியாகிய உபநிடதங்கள் (தைத்தீரிய உபநிடதம்) பரம்பரை அறுந்து போகாது இல்லறம் நடத்துவது பெரும் புண்ணியம் எனக் கூறுகிறது. காதல் திருமணங்களும் இடம் பெற்றுள்ளன. மணமாகாத பெண்கள் தாய், தந்தையருடன் இணைந்து வாழ்ந்தனர்.

இக்கால சமூகத்தில் „சதி‟ (உடன் கட்டை வழக்கம்) காணப்பட்டமைக்கான நேரடிச் சான்றுகளை அறிய முடியவில்லை. அதாவது, சிதையின் மேல் ஏறியப் பெண்ணை கீழே இறங்கும் படி அழைக்கும் பாடல் இருக்கு வேதத்தில் காணப்படுகிறது. (கணவன் இல்லாத பெண் உடன்கட்டை ஏறினால் அவளுக்கு அஷ்வமேதயாகம் செய்த பலன் கிட்டும் என காசிக்காண்டம் என்ற நூல் கூறும் கருத்து குறிப்பிடற்பாலது) மேற்கத்தைய அறிஞரான எச்.எச். வில்சன் அவர்கள், (ர்.ர் றுடைளழn) “ உடன்கட்டை ஏறுதல் என்பது இந்துப் பாரம்பரியத்தின் ஒரு பகுதி”5 எனக் கூறுகிறார். இக்கால சமூகத்தில், பெண்கள் இரண்டாவது திருமணம் செய்துகொண்டமைக்கும் ஆதாரங்கள் உண்டு. அதாவது, இக்காலத்தில் நிலவிய திவாரா (பெண்ணின் கொழுநன்) என்ற சொல் இரண்டாவது கணவனைக் குறித்து நிற்கிறது. பிள்ளைப் பேற்றுக்காகவும் சொத்து கைமாறாது இருப்பதற்காகவும் இவ்வாறு மறுமணம் செய்து கொள்ள அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

தைத்தீரிய சங்கீதை, ஐதரேய பிரமாணம் என்பன ஏக காலத்தில் ஒரு பெண் இரு கணவனை வைத்திருத்தலாகாது என்கிறது. மகாபாரதம் பெண்களின் மறுமணத்தைத் தடுக்கப் பல சட்டங்களை இயற்றியது. ஆனால், மகாபாரதத்தின் சாந்தி பருவம் பெண்கள் மறுமணம்; செய்தல் இயல்பு என்கிறது. கணவன் இல்லாத பெண்களுக்கு மறுவாழ்வு வழங்கப்பட்டுள்ளது என்பதனை மக்ஸ்முல்லர் அவர்களது கருத்தினூடாகவும் அறிந்துகொள்ளலாம். “ஓ பெண்மணியே நீ இன்;னும் இவ்வுலகில் வாழ வேண்டியவள். அவன் உயிர் போய்விட்டது. நீ இங்கே வாழ இன்னொரு கணவனைத் தேர்ந்து கொண்டு தாயாக வாழ்வாயாக. மங்களப் பெண்டீரே தாயாரே துயரின்றி கண்ணீரின்றி முன்னே வருவீர் அவளை மீண்டும் வாழ்வுக்குரியவளாக செய்வீர்.”6
அதே போன்று இக்கால சமூகத்தில் பால்ய விவாகம் இடம் பெற்றமைக்கும் சான்றுகளில்லை. தவறான வழியில் பெண் செல்லக் கூடாது என்பதற்காகவே முதல் ருது ஏற்படுவதற்கு முன் திருமணம் செய்து வைக்கப்பட்டதாக ஸ்மிருதி நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆனால், ஸ்ருதி நூல்கள் அச்சிந்தனைக்கு விதிவிலக்கானவையாகும்.

இல்வாழ்க்கையின் சிறப்புக்களை நோக்கின், இருக்கு, அதர்வண வேதங்களில் இல்வாழ்க்கையின் சிறப்புக்கள் எடுத்;தியம்பப்பட்டுள்ளன. தம்பதிகளை நோக்;கி, “நீவிர் இருவரும் இங்கே வாழ்வீர்களாக ; பிரிந்திருக்காதீர்கள் ; உங்களுடைய வீட்டிலே இன்பங்களை அனுபவித்துக் கொண்டு, மக்கள், பேரப்பிள்ளைகளுடன் ஆடிக்கொண்டு முழுமையான வாழ்க்கையை அநுபவிப்பீர்களாக, தம்பதிகள் பொன் ஆபரணங்கள் தரித்த ஆண் பிள்ளைகளுடனும் பெண் பிள்ளைகளுடனும் முழுமையான வாழ்க்கைளை அனுபவிப்பீர்களாக.” ( இ. வே: 8.31. 8 )

“நாமிருவரும் ஏகமனதுள்ளவர்களாக பிள்ளைகளின் பெற்றோர்களாக விளங்குவோமாக.”7

கணவன், மனைவியருக்கிடையே சம அந்தஸ்து காணப்பட்டமையினை,

“வீட்டிற்கு ஆட்சி புரிய வருகின்ற தலைவியே உனது வீட்டிற்குச் செல்வீராக.”

“நீ என்னில் சரி பாதி” , “கணவனுடைய வீட்டிற்குச் சென்று அங்கு அரசியாக வாழ்வாயாக.”- என அதர்வ வேதம் கூறுகிறது.

“மணமகன் , மணமகளது கரத்தை கைப்பற்றி நல் திட்டத்துக்காக யான் நின்கரம் பற்றுகிறேன் நின் கணவனான என்னுடன் மூப்பு வரை வாழ்வாயாக, அர்யமா, ஸவிதா, புரந்திர் ஆகிய தெய்வங்கள் உன்னை எனக்கு தந்துள்ளனர்.” எனக் கூறுவதனூடாக கணவன், மனைவியரிடையே காணப்பட்ட சமத்துவ மனப்பாங்கினையும் இல்லற வாழ்க்கையின் சிறப்பினையும் அறிய முடிகிறது.

மேலும்,“இந்த மணப் பெண் நல்ல மங்கலங்கள் பலவற்றை கொண்டு சேர்ப்பவள் இவளுக்கு சௌபாக்கியம் கிடைத்தல் வேண்டும் என வாழ்த்தி வீட்டுக்கு ஏகுங்கள்” என இருக்கு வேதம் கூறுகிறது. இதனை விளக்கி நிற்கும் சுலோகம் வருமாறு,

“ஸ}மங்கலி ரியம் வதூ ரிமாம் ஸமேத பச்யத

சௌபாக்ய மஸ்யை தத்வாயா யாஸ்தாமட விபேரதன.”….

கணவன் தர்மம் செய்வதற்கு மனைவி துணை நிற்பவள் என்ற அடிப்படையில் மனைவியை „சகதர்மினி‟ என அழைத்தனர். கணவனையும் மனைவியையும் „தம்பதி‟8 எனக் குறிப்பிட்டதாக பேராசிரியர் வி. சிவசாமி அவர்கள் இந்துப் பண்பாடு அன்றும் இன்றும் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

இவ்வாறு, பெண்களின் நிலை வேதகால சமூகத்தில் சிறப்பாக காணப்பட்ட போதும் பெண் பிள்ளைப் பேற்றினை விரும்பியதாகத் தெரியவில்லை. ஏனெனில், சிசு ஆணாக வளர்வதற்கான மந்திரங்களைப் பற்றி மட்டுமே அதர்வ வேதம் கூறுகின்றது. உதாரணமாக பிரார்த்தனைகளின் போது „ஆண் மகவு பிறக்கட்டும்.”9 என்ற வேண்டுதல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பெண்களின் கடமைகளாக, அக்கினி காரியம் செய்தல். விருந்தோம்பல், கடவுள் வழிபாடு, வீரமிக்கப் புதல்வர்களைப் பெறல் என்பன காணப்பட்டன.
பெண் கல்வி பற்றி நோக்கின், வேதகாலப் பெண்கள் கல்வி அறிவில் சிறந்து விளங்கியுள்ளனர் என்றே கூறலாம். லோபா, கோஷா, ஆபாலா, விஷாவாரா, லோப முத்ரா போன்ற பெண் கல்விமான்கள் காணப்பட்டுள்ளனர். அதாவது, வேதகாலத்தில் இருபது பெண்பாற் புலவர்கள் வரை காணப்பட்டதாக இருக்கு வேதம் குறிப்பிடுகிறது. மேலும் வேதங்களின் ஞான காண்டப்பகுதியாகிய உபநிடதங்கள், கார்த்திகாயினி , யாக்ஜவல்கியர் ஆகிய புலத்திறம் வாய்ந்த பெருமாட்டிகள் பற்றிக் கூறுகிறது. பெண்களது தொழில்கள் பற்றி நோக்கின், இக்காலத்தில் பெண்கள் நெசவு நெய்தல், தானியம் உடைத்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.

பெண்களது ஆடை, ஆபரணம் பற்றி நோக்கின், பல வகையான ஆடை, ஆபரணங்களை அணிந்துள்ளனர். அதாவது, நீவி, த்ராபி, பரிதா, அட்கா போன்ற ஆடைகளையும் தங்கம் வெள்ளியிலான கழுத்தணி, காதணி, மூக்கணி, மார்பணி, ஒட்டியாணம், வங்கி, கடகம், காற்சிலம்பு, தண்டை எனப் பல வகையான அணிகலன்களை அணிந்தனர். இவை பெரும்பாலும் பொன்னால் செய்யப்பட்டனவாகும். அத்துடன், நெய் தடவி கூந்தலை அலங்கரிக்கும் முறையினையும் பின்பற்றியுள்ளனர்.

பெண் கற்பினை பெரிதும் போற்றியுள்ளனர். அதாவது, பெண் திருமணமான பின் தன் கணவனை இறைவனாகப் போற்ற வேண்டும் என்ற நியதி காணப்பட்டுள்ளது. கற்புடைய மங்கை அளப்பரிய ஆற்றல் படைத்தவளாக எண்ணப்பட்டாள். இச்சந்தர்ப்பத்தில், கணவனின் பாதியே மனைவி என சதபதபிரமாணம் கூறும் கருத்து குறிப்;பிடற்பாலது. அதர்வ வேதமானது பரம்பொருளை பெண்ணாக உருவகிக்கிறது. ( நீ ஆண், நீ பெண்) இருக்கு வேதத்தில் ஏகபத்தினி விரதம், ஏகபதி விரதம் என்பன வலியுறுத்தப்பட்டுள்ளமையானது கணவனின் கற்பொழுக்கத்தினைப் பறைசாற்றுகிறது. இல்லங்களில் பெண்களுக்கென தனிப் பகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆண் சமயச் சடங்குகளை செவ்வனே நிறைவேற்றுவதற்கு பெண் பெரும் பங்களிப்பினை நல்கினாள்.
இவ்வாறாக, வேதகால சமூகத்தில் பெண்கள் உயர்நிலையில் காணப்பட்டனர். அதாவது, காதல் தேவதையாகவும் கலையரசியாகவும் இல்லத்தரசியாகவும் குலக்கொலுந்தாகவும் மக்களைப் பெறும் மகராசியாகவும் மறுவுலக வாழ்வின் ஏணியாகவும் திகழ்ந்துள்ளாள். அது மாத்திரமன்றி மணம் செய்து கொள்வதற்கும் மணத்தைப் புறக்கணித்து வாழ்வதற்கும் உரித்துடையவளாகக் காணப்பட்டாள்.

வேதங்களின் உட்பிரிவுகளில் ஒன்றான உபநிடதங்கள், கருவைப் பாதுகாக்கின்ற பெண் பாதுகாக்கப்பட வேண்டியவள் எனக் கூறுவதுடன், “இனவிருத்தி என்பது கடவுளின் மிகப் புனிதமான சின்னம்; கணவனும் மனைவியும் சேர்ந்து செய்கின்ற ஆழ்ந்தப் பிரார்த்தனை;;;;;;;;; ; நல்லதோ தீயதோ செய்வதற்கான பெரும் சக்தி பெற்ற ஓர் உயிரைக் கொண்டு வரப்போகின்ற பிரார்த்தனை.”10 எனக் கூறுகிறது.

மேலும், குரு – சீடர், தந்தை – மகன் ஆகியோருக்கிடையே உரையாடல்கள் நடைபெற்றதனைப் போன்று கணவன் – மனைவியருக்கிடையே ஆத்ம விசாரணைகள் நடைபெற்றுள்ளன. வேதாந்தச் சர்ச்சைகளில் இந்தியாவில் பெண்கள் பங்கெடுக்க உபநிடதக் காலத்தை அடுத்து ஏதென்சில் பெண்கள் நிந்தைக்கும் அவமதிப்புக்கும் ஆளானார்கள். பிளேட்டோ கி.மு 427- 348, க்ஸெனஃபோன் கி.மு 430- 355 ஆகியோரின் படைப்புகளில் பெண்கள் தத்துவச் சர்ச்சைகளில் பங்கெடுப்பது காணப்படவில்லை.”11 எனக் கூறப்பட்டுள்ளமையானது இந்தியப் பெண்களினது தத்துவஞான அறிவினைப் பறைசாற்றுகின்றது.

ஐதரேய உபநிடதத்தில் இடம் பெறும் „கர்ப்பிண்ய அபக்ராமந்து‟12 என்ற மந்திரம் ஆண் பெண் உறவு, கருத்தரித்தல் பற்றியது. இம்மந்திரமானது அரச சபை, பண்டிதர் சபை போன்ற பொது இடங்களில் உச்சரிக்கப்பட்டது. இம்மந்திரத்தில் இடம்பெறும் „கர்ப்பிண்ய அபக்ராமந்து எனும் வாசகம் கர்ப்பிணிகள் ஒதுங்கி நிற்கவும் எனும் பொருளைத் தருகிறது. இதன் மறைமுகக் கருத்தானது ஏனையப் பெண்களுக்கு அனுமதி உண்டு என்பதாகும். இக்காலப் பகுதியில் கார்க்கியும் மைத்திரேயும் சிந்தனை வளமிக்கப் பெண்களாக திகழ்ந்தனர். இவர்கள் ஆடவர்களுக்கு நிகராக சுதந்திரமாகவும் அச்சமில்லாமலும் வேதாந்த சர்ச்சைகளில் ஈடுபட்டுள்ளனர்.